சென்னை திருவல்லிக்கேணியில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த அரசியல் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்கு கேட்பது போல சென்று பெண்ணை காதல்வலையில் வீழ்த்தியதால் நிகழ்ந்த பயங்கர சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் சாலை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மதன், 36 வயதான இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிர்வாகியாக வாக்கு சேகரித்தார். அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவின் இணைந்தார்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வாக்கு பதிவு முடிந்த நிலையில் கூவம் கால்வாய் அருகே தனியாக நடந்து சென்ற மதனை இரு சக்கர வாகனத்தில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சுத்துபோட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இந்த கொலை அரசியல் பின்னணியில் நடந்ததா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்த போது இந்த கொலையில் தொடர்புடையவர்களாக அடையாளம் சந்தேகிக்கப்பட்ட 4 பேரை செல்போன் சிக்னல் உதவியுடன்போலீசார் மடக்கினர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மதன்குமாரின் வயது கடந்த காதல் விளையாட்டால் இந்த கொலைச்சம்பவம் அரங்கேறியது தெரியவந்ததுள்ளது. அரசியல் கட்சிக்காக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட போது மதன்குமாருக்கும் , அதே பகுதியை சேர்ந்த வினோத்குமாரின் தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அரசியல் தொடர்பான பணிகள் குறித்து பேசுவது போல மதன் குமார் அடிக்கடி வினோத்குமார் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று தன்னை விட வயதுக்கு மூத்த அந்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகின்றது.
ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையேயான தவறான தொடர்பை அறிந்த வினோத் மதன்குமார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளான். இந்த நிலையில் வாக்குபதிவு நாள் அன்று பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் வெற்றிக்காக வாக்குபதிவு மையத்தை சுற்றி காத்திருந்த நிலையில் மதன்குமார் மட்டும் அங்கு இல்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் சந்தேகம் அடைந்த வினோத்குமார் தனது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளான். அப்போது மதன் குமார் தனது வீட்டில் இருந்து தப்பி ஓடிஉள்ளான்.
இதையடுத்து தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து மதனை தீர்த்துக் கட்ட ஸ்கெட்ச் போட்ட வினோத், அடுத்த சில மணி நேரத்திற்கு எல்லாம் மதன்குமாரை கூட்டாளிகளுடன் சுற்றிவளைத்து வெட்டி கொன்று விட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் இந்த கொலை சம்பவத்தில் அரசியல் முன்விரோதம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்த போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.