கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி ஈஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தில் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.
அதே வேளையில் கோவை மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.