தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதை அடுத்து மொத்தம் 5 இடங்களில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி 51ஆவது வார்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள 1174ஆவது வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 996 வாக்குகள் உள்ள நிலையில் மந்தமாகவே வாக்குகள் பதிவாகின்றன.
சென்னை மாநகராட்சி 179ஆவது வார்டு பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் 5059ஆவது வாக்குச்சாவடியில் மொத்தம் 1324 வாக்குகள் உள்ளன. இங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மந்தமாகவே வாக்குகள் பதிவாகி வருகின்றன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17ஆவது வார்டில் 17ஆவது வாக்குச்சாவடியில் மொத்தம் 1781 வாக்குகள் உள்ளன. பிப்ரவரி 19ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் ஆண்கள் வாக்குச்சாவடியில் 621 வாக்குகளும், பெண்கள் வாக்குச்சாவடியில் 637 வாக்குகளும் பதிவாகி இருந்தன. 17ஆவது வாக்குச்சாவடியில் 949பேர் பெண்கள் உள்ளனர். இந்நிலையில் மகளிருக்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 16ஆவது வார்டில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் உள்ள 16ஆவது வாக்குச்சாவடியில் ஆண்களுக்கும் மகளிருக்கும் தனித்தனி வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை நகராட்சி 25ஆவது வார்டில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 57ஆவது வாக்குச்சாவடியில் ஆண்களுக்கும் மகளிருக்கும் தனித்தனி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு 845 ஆண் வாக்காளர்கள், 745 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1590 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 150 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மறுவாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு இடக்கை நடுவிரலில் அழியா மை அடையாளம் வைக்கப்படுகிறது.