நடிகர் விஜய் நீலாங்கரையில் தனது வீட்டுக்கு அருகே வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில், 7.10 மணியளவில் வீட்டிலிருந்து ரசிகர்கள் புடை சூழ சிவப்பு நிற மாருதி செலிரியோ காரில் நடிகர் விஜய் புறப்பட்டார். பின்னர், வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். மாநகராட்சிக்கு உட்பட்ட 192ஆவது வார்டில் நடிகர் விஜய் வாக்கு செலுத்தினார்.
நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகம் முழுவதுமே விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடும் நிலையில், நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கடந்த முறை சட்டமன்ற தேர்தலின் போது வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த நடிகர் விஜய் தற்போது சிறிய வகை மாருதி செலிரியோ காரில் வந்திருந்தார். காரைவிட்டு இறங்கி உள்ளே சென்ற விஜய் தனக்கு முன்னே வாக்குப்பதிவு மையத்தில் காத்திருந்த இரண்டு வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லினார்.
கூட்டத்தில் நின்றிருந்த வாக்காளர் ஒருவர் விஜய்யை பார்த்து Hello gentleman...So proud of you என கோஷமிட்டார்.
முன்னதாக, நடந்து வரும் போது, கால் தடுக்கி கீழே விழுந்த புகைப்பட கலைஞரை நடிகர் விஜய் தூக்கிவிட்டார்.
விஜய் வருகையை ஒட்டி, குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.