திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொலையான சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாநகரில் தாம் ஒரு "தாதா" வாக வேண்டும் என்ற கனவில் சுற்றித் திரிந்த கஞ்சா போதை ஆசாமியிடம் வாண்டடாகச் சென்று வம்பிழுத்ததன் விளைவாக கொலை நேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
திருப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செரங்காடு எனும் பகுதியில் நள்ளிரவில் ரஞ்சித் என்பவர் ரத்தகாயங்களுடன் காட்டுப்பகுதியில் இருந்து குடியிருப்பை நோக்கி ஓடிவந்துள்ளார்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்ற காவல்துறையினர், ரஞ்சித்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரஞ்சித்தின் நண்பரான சதீஷின் தலையற்ற உடல் மட்டும் அதே பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்து வந்த போலீசார், செவ்வாய்கிழமை காலை சதீஷின் தலையை எம்.எஸ்.நகர் பகுதியில் கண்டுபிடித்தனர்.
ரஞ்சித்திடம் மேற்கொண்ட விசாரணையை வைத்து, ராம்குமார், சுபா பிரகாஷ், மணிகண்டன், சதீஷ்குமார் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரில் கஞ்சா போதைக்கு அடிமையானவனான ராம்குமார், அப்பகுதியில் தாம் ஒரு தாதாவாக வர வேண்டும் என்ற கனவில் சுற்றித் திரிந்துள்ளான்.
சம்பவத்தன்று அங்குள்ள கடை ஒன்றின் அருகே கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த ராம்குமாரிடம் அவ்வழியாகச் சென்ற ரஞ்சித் தனக்கும் கொஞ்சம் தருமாறு கேட்ட நிலையில், ராம்குமார் கொடுக்க மறுக்கவே, வாய்த்தகராறு ஏற்பட்டு, கைலகப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.
ரஞ்சித்துடன் சென்ற அவனது நண்பர் சதீஷும் ராம்குமாரை தாக்கத் தொடங்கிய நிலையில், ராம்குமாரின் கூட்டாளிகளும் குடிபோதையில் அங்கு வந்துள்ளனர். அவர்களைப் பார்த்த ரஞ்சித், நண்பன் சதீஷை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளான்.
சதீஷை பிடித்து வைத்துக் கொண்ட அந்த கும்பல், அவனது செல்போனிலிருந்து ரஞ்சித்துக்குப் போன் செய்து, உடனே அங்கு வரவில்லை என்றால் சதீஷை கொலை செய்துவிடுவோம் என மிரட்டியிருக்கிறது.
குடியிருப்புவாசிகளுடன் ரஞ்சித் வருவதைப் பார்த்த கும்பல், சதீஷின் தலையை அவசர அவசரமாக துண்டித்து, கையோடு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
சதீஷை கொலை செய்வதன் மூலம் அப்பகுதியில் தாம் ஒரு தாதாவாக உருவெடுக்க முடியும் என்று எண்ணியே ராம்குமார் கொலை செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தொழில் நகரமான திருப்பூரில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தையும் மது போதையால் அரங்கேறும் சம்பவங்களையும் கட்டுப்படுத்த காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.