அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்த லாவண்யா, கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அவரின் தந்தை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையைத் துவங்கி குற்றச்சாட்டுக்குள்ளான பள்ளியின் விடுதி காப்பாளர் சகாயமேரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது 18 வயதுக்கு உட்பட்டோரை தற்கொலைக்கு தூண்டுதல், சிறார்களுக்கு எதிரான குற்றத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.