தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மக்களைக் கவர்வதற்காக பல்வேறு வகையிலும் வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் 12 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மங்கள கவுரி எண்ணெய் விற்றும், 16வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முத்துகாமாட்சி சிக்கன் விற்றும் நூதன முறையில் வாக்குகள் சேகரித்தனர்.
கடலூர் மாவட்டம் கடலூர் மாநகராட்சி 27வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சங்கீதா வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கி வாக்கு சேகரித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சம்பூரனத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வீடு வீடாகச் சென்று வெற்றிலைபாக்கு வைத்து வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக வேட்பாளர் இஸ்திரி கடையில் துணிகளுக்கு இஸ்திரி செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் 35 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் மைலாவதி தங்க குணசேகரனுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் உணவகம் ஒன்றில் ஃப்ரைட் ரைஸ் தயாரித்துக் கொடுத்து ஓட்டு சேகரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் 7வது வார்டில் போட்டியிடும் ஷாலினி விக்டர் என்பவர் ஹோட்டலில் தோசை சுட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
திருவொற்றியூர் மாநகராட்சி 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் தி.மு தனியரசு பறை இசை மேளம் அடித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
இதேபோல் திருவொற்றியூர் மாநகராட்சி 7வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஆதி குருசாமி என்பவர் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.