கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியால் இன்று வட கடலோர மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
நாளை தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 14 அன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக வேளாங்கண்ணியில் 11 சென்டிமீட்டரும், நாகப்பட்டினத்தில் 10 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம் ஆகிய இடங்களில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.