கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றும் பேரனின் உயிரை காப்பாற்ற முடியாத சோகத்தில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினவிளை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் - ரோசம்மாள் தம்பதியின் மகள் வழி பேரனான ஜெகன், சிறு வயது முதலே பாட்டி தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற ஜெகனுக்கு இதய கேளாறு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நாடு திரும்பிய நிலையில், அவருக்கு சொந்த ஊரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதற்காக ரோசம்மாள் புதிதாக கட்டிய வீட்டை விற்று செலவழித்து ஒரு வருடம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் ஜெகன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரோசம்மாள் கடந்த வாரம் விஷமருந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.