கோவில் நிலங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளிட்ட 7 கோவில்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு நிலங்கள் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் மூலம் ஆக்கிரமிக்கப்படுவதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில், குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்கவும், தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், உன்னதமான ஆன்மாக்கள், கோவில்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, அதனை பாதுகாக்க வேண்டிய கடமை கோவில் நிர்வாகத்துக்கு உள்ளதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.