சென்னை அம்பத்தூரில் மது போதையில் சாலையில் சென்ற பொதுமக்கள் 5 பேரை அரிவாளால் வெட்டி அட்டகாசம் செய்து விட்டு தப்பியோடிய 2 ரவுடிகளில் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம் பகுதியில் ஆட்டோவில் வந்த 2 ரவுடிகள் மாறிமாறி சண்டையிட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய சென்ற மாணிக்கம் என்பவரை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு, இருவரும் ஆட்டோவிலேயே அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதே போல் செல்லும் வழியில் மேலும் 4 பேரை அரிவாளால் வெட்டியதுடன் திமுக பிரமுகர் ஸ்ரீராம் என்பவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்க கண்ணாடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இருவர் கத்தியுடன் சுற்றுவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் ரவுடிகளை துரத்திப்பிடிக்க முயன்ற போது கணேசன் என்ற ரவுடி மட்டும் சிக்கினான்.
மற்றொருவன் தப்பியோடியுள்ளான். விசாரணையில் ரவுடிகள் இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.