நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், காங்கிரஸ், பா.ம.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.ம.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அதே நேரத்தில், அதிமுக, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தன.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2006ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டம் இயற்றியதை சுட்டிக்காட்டினார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 142 நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 1-ந் தேதி திருப்பி அனுப்பியுள்ளதாக கூறிய முதலமைச்சர், மசோதா மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும் முன்னே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருவது தொடர்பாக, வருகிற 8-ந் தேதி சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.