திருவள்ளூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பெண் ஒருவர் ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
புட்லூரைச் சேர்ந்த திவ்யா என்பவருக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து இருந்துள்ளார். பியூட்டி பார்லரை நடத்தி வந்த இவர், நேற்றிரவு பணி முடிந்தபின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
புட்லூர் ரயில்வே கேட்டை அவர் கடக்க முயன்ற போது, அரக்கோணத்தில் சென்னை நோக்கி விரைவு ரயில் வந்துள்ளது. அந்த தண்டவாளத்தை விரைவாகக் கடந்த திவ்யா, அடுத்த தண்டவாளத்தில் வந்த புறநகர் விரைவு ரயிலைக் கவனிக்காமல் இருந்துள்ளார்.
விரைவு ரயிலில் மோதிய வேகத்தில், இருசக்கர வாகனத்துடன் அவரது உடல் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. இதே பகுதியில் 10 நாட்களுக்கு முன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற ஒருவர் உயிர்தப்பியுள்ளார்.
ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.