திருநெல்வேலி அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறைத் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாகப் பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியை, கட்டட ஒப்பந்தக்காரர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் கைது செய்தனர். தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரித் தாளாளரும், தலைமை ஆசிரியையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சம்பவத்துக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாகவும், இடிந்து விழுந்த சுவர் 2007ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், சம்பவத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பே மனுதாரர்கள் பொறுப்பேற்றதாலும், ஊரடங்கு காலத்தில் பள்ளி மூடப்பட்டிருந்ததாலும் கட்டடத்தின் தன்மை குறித்து மனுதாரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். விபத்துக்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது எனக் கூறி இருவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.