விழுப்புரத்தில் உள்ள யா.முஹைய்யதீன் பிரியாணி கடையில் மூன்று நாட்களுக்கு முன்பு தயார் செய்த ஊசிப்போன பிரியாணியை வழங்கியதாக குற்றஞ்சாட்டிய வாடிக்கையாளர் ஒருவர் கடை உரிமையாளருடன் வாக்குவாதம் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
யூடியூப்பர்களால் பிரபலமாக்கப்பட்ட பல்லாவரம் யா.மொகைதீன் பிரியாணி கடையின் கிளை ஒன்று விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பாக,உள்ளது.
இந்த பிரியாணி கடைக்கு புதன்கிழமை மாலை 4 மணியளவில் வழக்கறிஞர்கள் இருவர் பிரியாணி சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
430 ரூபாய் கொடுத்து நாட்டுக்கோழி பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். இவர்களுக்கு உடனடியாக பிரியாணி வந்துள்ளது. அப்போது, நாட்டுக்கோழி பிரியாணியை சாப்பிட்ட வழக்கறிஞர், சப்ளையரை அழைத்து, சாப்பிட முடியாத அளவுக்கு பிரியாணியில் ஊசிபோன வாடை வீசுவதாக தெரிவித்திருக்கிறார்.
பிரியாணியில் ஒரு வாய் சாப்பிட்டுப் பாருங்கள், உண்மை உங்களுக்கே தெரியும் என்று வழக்கறிஞர் கூற, சப்ளையரும் அந்த பிரியாணியில் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்து விட்டு, நீங்கள் சொல்வது உண்மைதான், இந்த பிரியாணி தயார் செய்து மூன்று நாட்கள் ஆகிறது என்று கூறி தொழில் ரகசியத்தை உடைத்துவிட்டதாக கூறப்படுகின்றது
இதனால், அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர்கள் இருவரும் உடனடியாக விழுப்புரம் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் நாட்களுக்கு முன்பு தயார் செய்த பிரியாணியை, எந்த அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு இப்போது வழங்குகிறீர்கள் என்று பிரியாணி கடை உரிமையாளரிடம், கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரியாணிகடையில் பிரச்சனை என்றதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து, தங்கள் பங்கிற்கு அந்தகடையின் பிரியாணியை நுகர்ந்து பார்த்து செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டனர். வாக்குவாதம் நீடித்ததால் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கடை திறந்து 10 நாளில் பெயரை கெடுத்துக் கொண்டால் எப்படி வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று எச்சரித்த காவல் அதிகாரி மற்றும் வழக்கறிஞரை பார்த்து கடையின் உரிமையாளர் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கோரினார்
ஒரு கட்டத்தில் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு அதிகளவு கூட்டம் கூடியது. அங்கு வந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், கொரோனா பரவல் அச்சத்தைக் காரணம் காட்டி, இங்கே யாரும் அதிகளவு கூட்டம் கூட வேண்டாம். கலைந்து செல்லுங்கள் என்று கூறி, பிரியாணி தரம் இல்லை என்றால் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளியுங்கள், நாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று வழக்கறிஞர்களிடம் பேசி அழைத்துச்சென்றார்
ஊசிபோன பிரியாணி குறித்து வாடிக்கையாளர்கள் தகவல் தெரிவித்தும் உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் கடைசி வரை அந்த ஓட்டல் பக்கமே தலைகாட்டவில்லை . அதே நேரத்தில் ஊசிபோன பிரியாணி என்ற குற்றச்சாட்டுக்குள்ளான பல்லாவரம் யா .மொய்தீன் பிரியாணி ஓட்டலுக்கு சொந்தமான சென்னை கிளைகளில் கியூவில் நின்று வாடிக்கையாளர்கள் பிரியாணி வாங்கிச்செல்வது குறிப்பிடதக்கது.