காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்புத்துறை வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தமிழ்மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் அடுத்த தேர்வுக்கு தகுதி பெற முடியும் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தகுதித்தேர்வு ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வேலைகள் 100 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கே கிடைக்கும் வகையில் போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி தேர்வு கட்டாயம் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.