சென்னை பெரும்பாக்கம் பேருந்து பணிமனையில் பெண்ணை அடித்து தள்ளிவிட்ட ஓட்டுநரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த முருமதா, அவரது கணவர் செந்திலுடன் பாரிஸ் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை வந்துள்ளார். அப்போது பணிமனையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்தை 5.30 மணி வரை ஓட்டுநர் இயக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேட்டபோது அவர் ஒருமையில் பேசியதால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டதில், பேருந்து ஓட்டுநர்கள், செந்தில் மற்றும் முருமதாவை தாக்கி கீழே தள்ளினர். இதில் முருமதா மயங்கி விழுந்தார்.
இதனை கண்டித்து பணிமனை முன் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.