உசிலம்பட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா, மற்றும் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகக் கூறி, மாஸ்டர் பட பாணியில் பெட்டிக்கடைக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வாத்தி ரைடில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், போலீசாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் தப்பி ஓடிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர விஜய் மக்கள் இயக்க தலைவர் சோலை முத்து என்பவர் , தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக ஆர்ப்பட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தார். இதனை நம்பி அங்கு விஜய் ரசிகர்கள் சிலர் வந்திருந்தனர்.
ஆனால் அவரோ கூறியபடி ஆர்ப்பாட்டம் நடத்தாமல் உசிலம்பட்டி பேருந்து நிலைய வணிகவளாகத்திற்குள் சென்று அங்கு இருந்த பெட்டிக்கடைக்குள் தனது ஆதரவாளர்களும் புகுந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வது ஏன் என்று கேட்டு அதிரடியாக சோதனையில் இறங்கினர்
மாஸ்டர் படப்பணியில் போதை பொருட்களை ஒழிப்பதாக கூறி விஜய் ரசிகர்கள் நடத்திய சோதனையால் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் எரிச்சல் அடைந்தனர். குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டுமே தவிர தனி நபர்கள் சோதனையிட உரிமையில்லை என்று போலீசார் எச்சரித்தனர்.
அப்போது அவர்களுடன் வந்திருந்த ஒருவரை சுட்டிக்காட்டி அவர் சுகாதார ஆய்வாளர் என்பதால் அவருக்கு உதவியாக தாங்கள் சோதனை செய்வதாக தெரிவித்தனர். போலீசாரிடம் அனுமதி வாங்கினீர்களா ?என்று கேட்டதும் அதுவரை வேகமாக நடந்த வாத்தி ரைடு வாத்து ரைடானது.
பெட்டிக்கடைக்காரர் புகார் அளித்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று போலீசார் எச்சரித்ததால் விஜய் ரசிகர்கள் அத்தனை பேரும் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இருந்தாலும் வழக்கமான அரசியல் கட்சி போல இல்லாமல் தாங்கள் எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாக ஆக் ஷனில் இறங்குவோம் என்பதை மக்களுக்கு காட்டவே இந்த திடீர் சோதனையை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.