அரசு பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தத் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளநீர் வியாபாரியான பெண்மணி ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள பிரதமர், இப்படிச் செய்யப் பரந்த மனம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அமர்ஜவான் ஜோதியைத் தேசியப் போர் நினைவுச் சின்னத்துடன் இணைத்த உணர்ச்சிமயமான நேரத்தில், நாட்டுமக்களில் பலரும், தியாகிகளின் குடும்பத்தினரும் கண்ணீர் விட்டதாகக் குறிப்பிட்டார்.
மனத்தின் குரல் நிகழ்ச்சிக்காக ஒருகோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் அஞ்சல் அட்டை வழியாகச் செய்தி அனுப்பியதாகவும், 2047ஆம் ஆண்டில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் எதிர்காலத்திற்கான இளைய தலைமுறையின் பரந்த விரிவான கண்ணோட்டத்தைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த முகமது இப்ராகிம் அனுப்பிய அஞ்சலட்டையில் 2047ஆம் ஆண்டில் இந்தியா படைவலிமை மிக்க நாடாகத் திகழ வேண்டும் என்றும், நிலவில் ஆராய்ச்சித் தளத்தை அமைக்க வேண்டும் என்றும் விரும்பியுள்ளதைக் குறிப்பிட்டார். இத்தகைய இளைஞர்களைக் கொண்டுள்ள நாட்டுக்கு முடியாதது என்று எதுவுமில்லை எனத் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இளநீர் விற்கும் பெண் தாயம்மாள், கடும் நிதிநெருக்கடிக்கு இடையிலும், தனது குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டமைப்புகளைத் தரம் உயர்த்த ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதைப் பிரதமர் மோடி பெருமையுடன் குறிப்பிட்டார். இப்படிச் செய்ய பரந்த மனம் வேண்டும் எனக் கூறிப் பாராட்டினார்.
கொரோனாவின் புதிய அலைக்கு எதிராக இந்தியா வெற்றிகரமாகப் போராடி வருவதாகவும், நாலரைக் கோடிச் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கை அதற்கு வலிமையூட்டுவதாகத் தெரிவித்தார். கொரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவது மிகவும் சாதகமான அறிகுறியாகும் என்றும் குறிப்பிட்டார்.