திருவண்ணாமலையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரும், ஆசிரியரும் கட்டிப்புரண்டு தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கடலாடி அரசு மேல்நிலப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாமலைக்கும், அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் என்பவருக்கும் இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நிகழும் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இதேபோன்று இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், பள்ளியிலேயே சக ஆசிரியர்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்துக் கொண்டு கட்டிப்புரண்டு தாக்கிக் கொண்டனர்.
அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்து சண்டையை முடித்து வைத்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருக்கிறார்.