தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பணிநாள் என்பதால், வேட்புமனுக்கள் நாளையும் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4ந் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். மனுக்கள் மீதான பரிசீலனை 5ந் தேதி நடைபெறும். பிப்ரவரி 22ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், சென்னையில் 15 தேர்தல் பறக்கும் படை பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மற்றும் உள்ளுர் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இதனிடையே, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக் கட்சிகள் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளன. வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.