நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளின் போது ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும், அரங்குகள், அறைகளுக்குள் நுழையும்போது வெப்பமானி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும், 6 அடி இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்கள் அதிகப்பட்சமாக மூன்று ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். இயன்றவரை மின்னணு ஊடகங்கள் மூலமான பிரச்சாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வேட்பாளர்கள் வாக்காளர்களுக்குத் துண்டுச் சீட்டுகள் வழங்கும்போது முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. முகவர்கள், வாக்குச்சாவடி அலுவலர், வாக்கு எண்ணும் அதிகாரிகள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.