தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? அல்லது தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளை நீடிப்பதா? அல்லது தளர்வுகள் வழங்குவதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொற்று பாதிப்பு கணிசமான அளவில் இருந்தாலும், இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும் நிலையில், கட்டுப்பாடுகளை இதே நிலையில் நீடிக்கலாமா அல்லது தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறப்பது குறித்தும் கருத்துக்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் காலத்தில் கொரோனா பரவாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.