தரமற்ற உணவு வழங்கிய புகாரில் மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் அதன் கடைகளில் உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும், விலை அதிகமாக உள்ளதாகவும் பொதுமக்களிடன் புகார்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், சுகாதாரமற்ற உணவு வழங்குவது, உணவுக்கூடம், சமயலறை சுகாதார சீர்கேடான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புகார் அறிக்கை உணவகத்தின் ஒப்பந்ததாரருக்கு அனுப்பியும், குறைபாடுகள் சரி செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.