தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் நிலவிடும் பிரச்சினைகளைத் தீர்க்க ஏதுவாகத் தொடர்புடைய துறைகளுடனும், மாவட்ட ஆட்சியர்களுடனும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை, அரியலூர் -காரைக்குடி சாலை தொடர்பான பிரச்சினைகள் பொதுப்பணித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளரின் தலையீட்டால் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
நிலம் கையகப்படுத்துவதற்கான தகுதிவாய்ந்த ஆணையம் நிர்ணயித்த மதிப்பீட்டையோ, மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்ட நடுவர் முடிவுகளுக்கோ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புக்கொள்ளாததே திட்டச் செயல்முறையை முடக்கியுள்ளதாகக் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.