நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர்களை நடுக்கடலில் தாக்கி ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வலை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 3 பேர் மீன் பிடிக்கச் சென்றதாகவும், மற்றொரு படகில் வந்த 3 கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கடலில் தூக்கி வீசிவிட்டு 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, டீசல் பேரல் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அருகில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்களின் உதவியுடன் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பிய 3 மீனவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.