புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்த ஆசிரியை ஒருவர் தனது சம்பள பாக்கி கிடைக்காததால் விரக்தி அடைந்து, மேஜையில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை தூக்கி எறிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் தைலம்மை. இவர் ஏற்கனவே கூம்பள்ளம் அரசு தொடக்க பள்ளியில் பணி புரிந்த போது இவருக்கு இரு மாதம் சம்பளம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
தற்போது மணமேல்குடி தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த இவர், உரிய அனுமதி இன்றி அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததை காரணம் காட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் தைலம்மையின் பெயர் சம்பளப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், மாத சம்பளம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் அவருக்கு ஊதியம் வரவில்லை. இது குறித்து வட்டார கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று பலமுறை கேட்டும் சம்பள பாக்கி கொடுக்காமலும், உரிய பதில் சொல்லாமலும் அலைக்கழித்ததாக கூறப்படுகின்றது.
இதனால் விரக்தி அடைந்த மன நிலையில் அவர், தலைமை வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு முறையான பதில் தெரிவிக்கப்படாத நிலையில், சம்பளம் நிறுத்தப்பட்டதால் குடும்பமே சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதாக கூறி தனது நிலையை சொல்லி ஆதங்கப்பட்ட ஆசிரியை தைலம்மாள், வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை தள்ளிவிட்டும் தூக்கி வீசியும் ஆவேசம் காட்டினார்.
அடுத்ததாக அலுவலகத்தின் மற்ற மேஜைகளில் இருந்த ஆவணங்களையும் தூக்கி வீசி கொந்தளித்தார்.அவரை தடுக்க பயந்து அனைவரும் விலகி நின்றதால், ஆசிரியை தைலம்மை தனக்கு சம்பளம் வழங்க முடியாத உங்களுக்கெல்லாம் எதற்கு அலுவலகம் என்று வசைபாடியபடியே அங்கிருந்து சென்றார்
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஊழியர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பிய நிலையில், தைலம்மாள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதாக கூறி ஆசிரியை தைலம்மையை பணி இடை நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.