கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2 வாரங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, 10,000 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளியூர்களில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வருவோர் செல்ல ஏதுவாக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து ஆட்டோக்கள் மற்றும் வாடகை டாக்சிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது குறைந்த அளவு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை மற்றும் ஓஎம்ஆர் சாலைகள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நெடுஞ்சாலைகள் இரவுமுதலே வெறிச்சோடின.
இதேபோன்று மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகூர்த்தநாளான இன்று அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.