திருமண வரவேற்பில் மணப்பெண்ணின் கையைப் பிடித்து உறவினர் ஆடியதை கண்டித்ததால் திருமணம் நின்று போனதாக மணமகன் புகார் அளித்திருந்த நிலையில் ஐ.டி மாப்பிள்ளை வரதட்சணையாக கார் கேட்டதால் திருமணத்தை நிறுத்தியதாக மணப்பெண் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் மென்பொறியாளர் ஸ்ரீதர், குடுமியான் குப்பத்தை சேர்ந்த ஜெய சத்தியாவுக்கும் நடந்த திருமண வரவேற்பில் டி.ஜே இசை நிகழ்ச்சியில் மணப்பெண் கையை பிடித்தும், தோளில் கையைப் போட்டும் உறவினர்கள் ஆடியதால் பிரச்சனை ஏற்பட்டது.
உறவினரை கண்டித்ததால் மணப்பெண் ஜெயசத்தியா, திருமணத்தை நிறுத்திவிட்டு அவரது உறவுக்கார இளைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், தான் செலவழித்த 7 லட்சம் ரூபாயை திரும்ப பெற்றுத்தரக்கோரியும் ஸ்ரீதர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் ஸ்ரீதரின் புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மணப்பெண் ஜெயசத்தியா ஒரு புகார் மனு ஒன்றை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
அதில், மணமகன் ஸ்ரீதர் டி.ஜே நிகழ்ச்சியின் போது குடி போதையில் தன்னை தாக்கியதோடு, கார் மற்றும் 50 சவரன் நகை கூடுதல் வரதட்சனை தந்தால் தான் தாலி கட்டுவேன் என்று கூறியதாகவும், தன்னை தவிர எவன் உன் கழுத்தில் தாலி கட்டுவான் என்று கேட்டு தாக்கியதால் மாமன் மகனை தான் திருமணம் செய்து கொண்டதாக ஐ.டி மாப்பிள்ளை ஸ்ரீதருக்கு எதிராக குற்றஞ்சாட்டினார்.
இரு தரப்பையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இழப்பீடாக பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக மணப்பெண் ஜெய சத்தியா ஆதாரமில்லாமல் பொய்யான வரதட்சணை புகாரை தெரிவிப்பதாக மணமகன் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தை நாடி நியாயத்தை பெற்றுக் கொள்வதாகக் கூறி, மணப்பெண் ஜெய சத்தியாவுடன் அவரது உறவினர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
தங்களை நம்ப வைத்து ஏமாற்றிய தோடில்லாமல், பெண்களின் உரிமையை நிலைநாட்ட கொண்டுவரப்பட்ட வரதட்சணைக் கொடுமை தடுப்பு சட்டப்பிரிவை ஜெயசத்தியா போன்ற பெண்கள் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மணமகன் வீட்டார் வேதனை தெரிவித்தனர்.