சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதனை இணையதளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த முருகன் கோயிலில் கடந்த 2007ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு தற்போது அக்கோவில் புனரமைக்கப்பட்டு, நாளை காலை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், யாகசாலையில் வைத்து பூஜிக்க கங்கை, யமுனை, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் இருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.
நாளை முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜோதி டிவி, யூ-டியூப் சேனல் உள்ளிட்டவை மூலம் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.