ஈரோடு மாவட்டம் பவானி அருகே பெண் படுகொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த பெண்ணின் குடும்ப நண்பர் கைது செய்யப்பட்டுள்ளான்.
லட்சுமி நகரைச் சேர்ந்த வளர்மதி என்ற அந்தப் பெண் வியாழக்கிழமை பட்டப்பகலில் தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளைபோயிருந்தது.
அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வளர்மதியின் குடும்ப நண்பனான நிக்கோலஸ் என்பவன் கொலை நடந்த நேரம் வீட்டுகு வந்து சென்றிருந்தது பதிவாகி இருந்தது.
அவனைப் பிடித்து விசாரித்ததில், அவ்வப்போது வளர்மதி குடும்பத்தாரிடம் பணம் கடனாக வாங்கி திருப்பி கொடுத்து வந்த நிக்கோலஸ், கடந்த சில முறை வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல், மேலும் பணம் கேட்டுள்ளான்.
பணம் தர வளர்மதி மறுத்ததால், சம்பவத்தன்று வாக்குவாதம் ஏற்பட்டு, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாகக் கொலை செய்த நிக்கோலஸ், கழுத்திலிருந்த தாலிக் கொடியையும் செயினையும் பறித்துக் கொண்டு தப்பியோடி இருக்கிறான்.