சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கும் அண்ணா நகர் கிளப் நிலுவை வைத்துள்ள வாடகை பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் கிளப்பை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாநகர் கிளப்பில் மதுபான கூடம் திறக்க அனுமதி கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் கிளப் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வீட்டுவசதி வாரியம், நிலுவையிலுள்ள 52 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை முதலில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியது.
இதனை எதிர்த்து கிளப்பின் செயலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஏற்கனவே 20 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டதாகவும் , மீதமுள்ள தொகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வீட்டு வசதி வாரியத்தின் விதிமுறைகளை மீறி எந்த அனுமதியும் கோர முடியாது என தெரிவித்ததோடு, நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை செலுத்த உத்தரவிட்டார்.