நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதுடன் ஒரு விசைப்படகின் மீது மோதி மூழ்கடித்ததாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்து விட்டு அதிகாலை கரை திரும்பும் போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் நோக்கில் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் மீனவர்கள் முயற்சி செய்த போது கற்களை வீசியும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது வஸ்தியான் என்பவரது படகு நடுக்கடலில் மூழ்கிய நிலையில், கடலில் தத்தளித்த 7 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். முதலமைச்சரை சந்தித்து இந்த பிரச்சினை குறித்து முறையிட மீனவ அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.