திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்க வளையலை திருடிச் சென்ற இரண்டு பெண்களை, சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டினத்தை சேர்ந்தவர் செய்யது சித்திக். இவர் காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு நகை வாங்க வந்த இரண்டு பெண்கள் பல்வேறு நகைகளை தேர்வு செய்வது போல நடித்தனர்
இறுதியில் 16 கிராம் எடையுள்ள இரண்டு வளையல்களை எடுத்து ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து திருடி சென்றனர். இந்த கில்லாடி கொள்ளைக்காரிகளின் திருட்டு சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் செய்யது. ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து இரண்டு பெண்களையும் தேடி வந்தனர்.
விசாரணையில் அந்த ஜேப்படி பெண்கள் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை - ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வி , பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 16 கிராம் எடையுள்ள தங்க வளையல்களை பறிமுதல் செய்தனர்
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.
நகை கடைகளில் மட்டுமல்ல பொது இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள இது போன்ற சிசிடிவி கேமராக்கள் கொள்ளையர்களை காட்டிக் கொடுக்கும் மூன்றாவது கண்ணாக விளங்குவதால் குற்ற வழக்குகளில் போலீசார் விரைவாக துப்பு துலக்க உதவியாக உள்ளது