திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் பொங்கலையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இளவட்டக்கல் மற்றும் உரலைத் தூக்கி சாதனை படைத்தனர்.
உடல் திறனையும் மன உறுதியையும் காட்டும் விளையாட்டுக்களில் இளவட்டக் கல் தூக்குதலும் ஒன்றாகும். அதிகக் கனமுள்ள உருண்டையான கல்லைத் தூக்கும் திறன் பெற்ற இளைஞனுக்கே பெண்ணை மணமுடித்துக் கொடுத்ததாகக் கதைகள் உண்டு.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கொழிந்து போனாலும் திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளையில் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் இளவட்டக் கல் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. 45 முதல் 140 கிலோ வரை வெவ்வேறு எடையுள்ள 5 உருண்டைக் கற்கள் போட்டிக்குப் பயன்படுத்தப்பட்டன.
இளவட்டக் கற்களைத் தூக்கித் தோளுக்குக் கொண்டுவந்து தலைக்குப் பின்புறமாகக் கழுத்தைச் சுற்றிக் கொண்டுவந்தால் வெற்றிபெற்றதாகக் கருதப்படும்.
இளைஞர்கள் பலரும் சளைக்காமல் இளவட்டக் கல்லைத் தூக்கித் தங்கள் வலுவைக் காட்டினர். 140 கிலோ கல்லைத் தூக்கி சாதனை படைத்த தங்கராஜ் என்பவருக்கு முதல்பரிசு பெற்றார்.
ஆண்களுக்குச் சமமானவர்கள் என்பதைக் காட்டும் வகையில் பெண்களும் இளவட்டக் கல்லைத் தூக்கித் தங்கள் வலுவை வெளிப்படுத்தினர்.
இளைஞர்கள் பலர் உரலைத் தங்கள் உள்ளங்கைகளால் பிடித்துத் தலைக்கு மேல் தூக்கி வலிமையைக் காட்டினர்.
உரலைப் பலமுறைத் தூக்கித் தோளுக்குப் பின்புறமாகப் போடும் போட்டியில் ராஜகுமாரி, பத்மா ஆகியோர் பரிசு பெற்றனர்.