உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் வள்ளுவர். பெருமைமிக்க உழவர்களைக் கொண்டாடும் நாளாக போற்றப்படுவது தைத்திங்கள் முதல்நாள்... உழவுத்தொழிலுக்கு உதவி செய்த கதிரவனுக்கு நன்றி செலுத்தும் சிறப்பு வாய்ந்த நாள் பொங்கல் திருநாள்...
தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் தைப்பொங்கலுக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் பாரம்பரியத் திருவிழாவாக இதனைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
புத்தாடை அணிந்து, புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு பழங்களுடன் கதிரவனுக்குப் படையலிட்டு இந்த நாளை வீடுதோறும் மக்கள் கொண்டாடுகின்றனர். பொங்கல் பானை பொங்குவது போல் இல்லம்தோறும் மகிழ்ச்சி பொங்கும் நன்னாளாக இது வரவேற்கப்படுகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், நேரிலும் சமூகவலைதளங்கள் மூலமும் நண்பர்கள், உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.