சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கு விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும், என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை முதல் சிஐடி நகர் முதல் பிரதான சாலை வரை, 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பு இடையே, இருவழிப் பாதை கொண்ட புதிய மேம்பாலமும், 142 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை மீது இருவழிப் பாதை கொண்ட புதிய மேம்பாலமும் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 மேம்பாலங்களின் கட்டுமானத்திற்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை நிர்வாக அனுமதி அளித்துள்ள நிலையில், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 335 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.