கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தொடர்பான உண்மையான விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்று பாதித்தவர்கள் உண்மையிலேயே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமா? அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தொற்று பாதித்தவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய நிலையில், அதே நாளில் அவரது துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சுமார் 800 பேர் தான் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, அமைச்சரின் பேட்டி உண்மையா அல்லது சுகாதாரத்துறை அறிக்கை உண்மையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்