சேலம் இளம்பிள்ளை அருகே, சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாததால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், ஆத்திரம் அடைந்த மாணவியின் பெரியப்பா பள்ளிக்குள் புகுந்து சினிமா பாணியில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் இளம்பிள்ளை அடுத்த திசை விளக்கு தொப்பபட்டியை சேர்ந்தவர் மான் என்கிற கண்ணன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது சகோதரர் மோகனின் மகள், சேலம் இளம்பிள்ளை அருகே சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்ந்தார். சம்பவத்தன்று அந்த பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று வெயிலில் நிற்கவைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
இதனால் விரக்தி அடைந்த நிலையில் வீடுதிரும்பிய மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவியின் தந்தை மோகன் தனது சகோதரர் மான் கண்ணனுடன் ஆவேசமாக அந்த பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த பள்ளியின் தாளாளர் முருகேசனிடம், கல்வி கட்டணத்துக்காக தங்கள் மகளை அவமானப்படுத்தியது ஏன் ? என்று கேட்டு தெலுங்கு சினிமா பாணியில் மாணவியின் பெரியப்பா சத்தமிட்டு எச்சரித்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கள் வீட்டு பெண் பிள்ளைக்கு இப்படி ஒரு அவமானம் நிகழ்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் அவர், பள்ளி நிர்வாகிகளுடம் நியாயம் கேட்டதாக கூறப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகமோ அவர் தங்களை மிரட்டுவதாக தெரிவித்தனர்.
இதனால் உக்கிரமடைந்த மான், பள்ளி நிர்வாகத்தின் பல்வேறு லீலைகளை வெளியிடப் போவதாக அங்கிருந்த ஜீப்பின் மீது கையால் அடித்து சவால் விட்டார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளி தாளாளர் முருகேசன், தாங்கள் மாணவிகளை வெயிலில் நிறுத்தவில்லை என்றும், தன்னுடைய அனுபவத்தில் இவ்வளவு கேவலமாக எவரும் தங்களை பேசியதில்லை என்றும், தங்களை மாணவியின் உறவினர்கள் மிரட்டிய காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பள்ளி தாளாளர் முருகேசன் தங்களை மிரட்டியதாக மாணவியின் தாய் சின்னபொண்ணு குற்றஞ்சாட்டினார்
தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்வதற்காக இரு தரப்பு புகார் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.