கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு எதிராக, உடற்கல்வி ஆசிரியை பாலியல் புகார் அளித்த நிலையில், போலீஸ் விசாரணையில் அந்த ஆசிரியையின் காதல் விளையாட்டை கண்டித்ததால் அவதூறாக புகார் கொடுத்தது அம்பலமாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அரசு உதவி பெறும் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சோபியா ராஜகுமாரி என்பவர் உடற்கல்வி ஆசிரியையாக, கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். பிஷப் ஒருவரின் மகளான சோபியா ராஜகுமாரி, கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சோபியா கடலூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு தான் பணிபுரியும் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்த ஆனந்த பாஸ்கரன் என்பவர், பாலியல் ரீதியாக தன்னைப் பயன்படுத்த முயன்றதாகவும், தான் சம்மதிக்காததால் சக ஆசிரியர்கள் முன்னிலையில் தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசி அசிங்கப்படுத்துவதாகவும், பணி இடமாற்றம் செய்து விடுவதாக மிரட்டி வந்ததாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், தனக்கு சி.எஸ்.ஆர். கூட தரவில்லை என்றும், விசாரணை முடிவதற்குள்ளாக இடமாற்றல் உத்தரவை கையில் கொடுத்து விட்டதாகவும் சோபியா குற்றஞ்சாட்டி இருந்தார்.
உடற்கல்வி ஆசிரியையின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் ஆனந்தபாஸ்கரனிடம் கேட்ட போது, பள்ளிக்குள் நடந்த காதல் விளையாட்டு அம்பலமானது. பள்ளியில் வேலை பார்க்கும் செல்வம் என்பவருடன் காதல் விளையாட்டுக்களில் ஈடுபட்ட சோபியாவைக் கண்டித்ததால், தன் மீது இந்த அபாண்ட குற்றச்சாட்டை அவர் கூறுவதாக விளக்கம் அளித்தார்.
சோபியா அளித்த புகார் குறித்து, காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது தங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் செல்வம் என்பவருடன் தவறான உறவு வைத்துக் கொண்டு ஜோடியாக வெளியிடங்களில் சுற்றி வந்த சோபியா, பள்ளிக்குள்ளேயே அத்துமீறலில் ஈடுபட்டதை ஆசிரியர்களும், மாணவர்களும் பார்த்து தன்னிடம் புகார் அளித்ததை சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் நிரூபித்ததாகத் தெரிவித்தார் ஆனந்த பாஸ்கரன்.
பிஷப் மகள் என்பதால் ஆசிரியை சோபியாவை கண்டித்து அனுப்பியதாகவும், உடற்கல்வி ஆசிரியையின் செயல்பாடு நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி, செல்வத்தின் மனைவியுடன் சண்டையிடும் சூழல் வந்ததால், பொதுமக்களே பள்ளிக் கல்வித்துறைக்கு புகார் அனுப்பியதாகவும், அதன் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி, உண்மையை அறிந்து சோபியாவை பணியிட மாற்றம் செய்ய அறிவுறுத்தியதாகவும், அதன் பேரிலேயே இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் ஆனந்த பாஸ்கரன் தெரிவித்தார்.
பாலியல் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சட்டங்கள் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில் , சோபியா போன்ற சிலர் தங்களுடைய தனிப்பட்ட பகைக்காக போலியாகப் பாலியல் புகார் தெரிவிப்பது தவறான முன் உதாரணமாகிவிடும் என்று காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.