திருப்பெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் பொங்கல் விடுமுறைக்குப் பின் மீண்டும் உற்பத்தி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 17 அன்று ஆலையின் விடுதியில் வழங்கிய உணவை உண்ட தொழிலாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் போராட்டத்துக்குப் பின் ஆலை மூடப்பட்டது.
தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கும்படி பாக்ஸ்கான் நிறுவனத்திடம், அதற்கு ஆர்டர்கள் கொடுக்கும் ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டது.
ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறியாளர்கள், பணியாளர்கள் தொழிற்சாலைக்கு வந்துள்ளபோதும், பொங்கலையொட்டிப் பெரும்பாலான தொழிலாளர்கள் வராததால் இன்று உற்பத்தி தொடங்கவில்லை. பொங்கல் விடுமுறைக்குப் பின் மீண்டும் உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளதாக ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.