மாமல்லபுரத்திலுள்ள தனியார் சொகுசு ரிசார்ட்டில் இயங்கி வரும் கைவினைப் பொருட்கள் விற்பனையகத்தில் இருந்து அரியவகை இராவணன் சிலை உட்பட சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான 12 தொன்மையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஐடியல் பீச் ரிசார்ட் வளாகத்தில் இயங்கி வரும் இந்தியன் காட்டேஜ் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தில் மிகவும் தொன்மையான பார்வதி சிலை ஒன்று மறைத்துவைக்கப்பட்டு இருப்பதாகவும் அது வெளிநாட்டுக்குக் கடத்தப்படவிருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த அரியவகை இராவணன் சிலை உட்பட 12 சிலைகளையும் மீட்டனர். தனது பத்துத் தலைகளுக்குப் பின்னால் சீதையைக் கொண்டிருக்கும் ராவணன் சிலை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக ஜாவீத்ஷா என்பவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.