பேராசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்காதது, மற்றும் பாலின பாகுபாடு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழக உயர்கல்வித்துறைக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில், கணிசமான அளவில் தற்காலிக அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நிரந்தர பேராசிரியர்களுக்கு இணையான வேலையை மேற்கொள்ளும் நிலையில், அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படாதது குறித்தும், ஆண் - பெண் பேராசிரியர்களிடையே பாலின பாகுபாடு பார்க்கப்படுவது குறித்தும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு, தமிழக கௌரவ விரிவுரையாளர் சங்கம் புகார் அனுப்பியது.
இப்புகாரை பதிவு செய்துகொண்ட மனித உரிமைகள் ஆணையம், இதுகுறித்து 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு, தமிழக உயர்கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.