கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகத் தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. மருத்துவம், இன்றியமையாப் பணிகள் ஆகியவற்றுக்கான வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் இயங்கவில்லை.
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த வார நாட்களில் இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இன்றியமையாப் பணிகளுக்குச் செல்லும் பணியாளர்களின் வாகனங்களைத் தவிரப் பிற வாகனங்கள் இயக்கப்படவில்லை.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஒரகடம், திருப்பெரும்புதூர் ஆகிய நகரங்களில் நெடுஞ்சாலைகளிலும், சந்திப்புகளிலும் தடுப்புகளை அமைத்துக் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுவோரைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரத்தில் காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம், பூக்கடை, சத்திரம் ஆகிய பகுதிகளில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து, ஆள்நடமாட்டம் இன்றிக் காணப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தேவையின்றி வெளியே சுற்றுவோர், முகக்கவசம் அணியாதோர் ஆகியோருக்குக் காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
திருச்சியில் காந்தி சந்தை, பாலக்கரை, சிந்தாமணி, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றியமையாப் பணிக்குச் செல்வோரின் வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனர். ரயில், விமானப் பயணிகள் பயணச் சீட்டைக் காட்டிவிட்டுச் செல்கின்றனர்.
தஞ்சாவூரில் மருந்தகங்கள், பாலகங்கள், பெட்ரோல் நிலையங்கள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுப்பேருந்துகள், தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆலங்குடியில் சாலைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்தோரை எச்சரித்து அனுப்பினர்.
நாகப்பட்டினத்தில் பாலகங்கள், மருந்துக்கடைகள், உணவகங்கள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மூடப்பட்டுள்ளது.
மதுரையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பெரியார் பேருந்து நிலையம் ஆள்நடமாட்டம் இன்றிக் காணப்படுகிறது. சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து மதுரைக்குப் பேருந்துகளில் வந்து சேர்ந்த பயணிகள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்குப் பேருந்துகள் இயக்கப்படாததால் இன்னலுற்றனர்.
ராமேஸ்வரத்தில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்தோரைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர். ஆன்மீகத் தலமான ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவகங்களில் பார்சலில் உணவு வழங்கப்படுகிறது. கோவிலைச் சுற்றித் தங்கியுள்ள சன்னியாசிகளுக்குக் காவல்துறையினர் உணவு வழங்கினர்.
தேனி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பாலகங்கள், மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. பார்சலில் உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் பெரும்பாலான உணவகங்கள் திறக்கப்படவில்லை. தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம் ஆகிய நகரங்களில் வாகனப் போக்குவரத்து, ஆள்நடமாட்டம் இல்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பேருந்து நிலையம், கடைவீதி, கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லை. நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடி அமைத்துக் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுவோரைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர்
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் உள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றியமையாப் பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களைத் திருப்பி அனுப்புகின்றனர். கேரளத்தில் இருந்து வரும் பேருந்துகள் எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றன.
சேலத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், முதன்மையான சாலைகள் ஆகியவற்றில் வாகனப் போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் இல்லை. மாநகரில் எண்ணூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உணவகங்கள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் திறந்துள்ள நிலையில் மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதுரையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பெரியார் பேருந்து நிலையம் ஆள்நடமாட்டம் இன்றிக் காணப்படுகிறது. சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து மதுரைக்குப் பேருந்துகளில் வந்து சேர்ந்த பயணிகள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்குப் பேருந்துகள் இயக்கப்படாததால் இன்னலுற்றனர்.
ராமேஸ்வரத்தில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்தோரைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர். ஆன்மீகத் தலமான ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உணவகங்களில் பார்சலில் உணவு வழங்கப்படுகிறது. கோவிலைச் சுற்றித் தங்கியுள்ள சன்னியாசிகளுக்குக் காவல்துறையினர் உணவு வழங்கினர்.
தேனி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பாலகங்கள், மருந்தகங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. பார்சலில் உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் பெரும்பாலான உணவகங்கள் திறக்கப்படவில்லை. தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம் ஆகிய நகரங்களில் வாகனப் போக்குவரத்து, ஆள்நடமாட்டம் இல்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பேருந்து நிலையம், கடைவீதி, கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லை. நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடி அமைத்துக் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றுவோரைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர்.
தூத்துக்குடியில் முழு ஊரடங்கையொட்டி அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தடுப்புகளை அமைத்துச் சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தோர், முகக் கவசம் அணியாதோர் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலையில் அனைத்துச் சாலைகளிலும் வாகனப் போக்குவரத்தும், ஆள்நடமாட்டமும் இல்லை. தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தோருக்குக் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
விழுப்புரத்தில் மருந்தகங்கள், பாலகங்களைத் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகள் வாகன இயக்கம் இன்றிக் காணப்படுகின்றன. முதன்மையான சந்திப்புகளில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.