கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 2 நாட்களுக்கு முன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்திருந்தனர். மீண்டும் கர்நாடகா திரும்பிய அவர்களுக்கு மாநில எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் எதிரொலியாக மேல் மருவத்தூர் கோவிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள், கோவில் பணியாளர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்த அறிக்கையை வைத்திருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.