நாகப்பட்டினத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை ஜிபிஎஸ் கருவி மூலம் போலீசார் கைது செய்தனர்.
வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பல்மருத்துவர் பழனிவேல், பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை எனவும், அதில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஜி.பி.எஸ் சிக்னல் மூலம் விசாரணை நடத்தியதில், அந்த வாகனம் அங்குள்ள தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் குடோனில் நிற்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு போலீசார் சோதனையிட்டதில், 4 திருட்டு பைக்குகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், வாட்டர் கேன் விற்பனை செய்துவரும் ரமணா என்பவரிடம் பணியாற்றி வந்த தர்மன், ஜென்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். குடோனில் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு வேறு ஏதேனும் குற்ற செயல்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.