கரூரில் தனது செல்போனில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக மதுபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. செல்போன் நிறுவனங்களின் நெட்வொர்க் பிரச்சனையால் குடிமகனால் நிகழ்ந்த திருவிளையாடல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் இரும்புக் கடையில் வேலை செய்து வரும் இளங்கோ என்ற மதுப்பிரியர் தான் போதையில் டவரில் ஏறி போலீசுக்கு டப்பைட் கொடுத்தவர்
புத்தாண்டை மது போதையில் கொண்டாடிய இளங்கோ, தனது கூட்டாளியை அழைப்பதற்காக தனது செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போனில் டவர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வேலை செய்துவரும் கடை அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு மேலுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி உள்ளார். அப்போது அவரது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது
இளங்கோ செல்போம் ரவரின் உச்சிக்கே சென்ற நிலையில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் கரூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். டவர் மேல் ஏறியும் தனது செல்போனில் ஏன் சிக்னல் கிடைக்கவில்லை என்பது தான் குடிமகனின் ஆதங்கமாக இருந்தது.
அப்போது திடீரென்று மழை பெய்ய துவங்கியதால் பதறி போன இளங்கோ செல்போன் டவரில் இருந்து கீழே இறங்க சம்மதித்தார் ஆனால் அவரால் இறங்க இயலவில்லை. அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கரூர் நகர போலீசார் விசாரணைக்காக இளங்கோவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் போலீசாரிடம் டவர் மீதே ஏறியும் ஏன் தனது செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை என்று எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்ற பாணியில் கேட்டுள்ளார் இளங்கோ.
அதற்கு போலீசார், தம்பி உங்க செல்போனில் நீங்க பயன்படுத்துற சிம்கார்டுடைய நெட்வொர்க் வேறு, நீங்க ஏறி போராட்டம் செய்த டவரோட நெட் வொர்க் வேறு, நீங்க ஏறியது பல வருஷமா பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட ஏர்செல் டவர் என்று விளக்கிய போலீசார் அதில் ஏறினா எப்படி உங்க செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும் ? என்று கேட்டு சிறப்பு கவனிப்புடன் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.