நாகப்பட்டினத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் இடத்திற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 6 லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெத்தி கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பிளாஸ்டிக் நாற்காலிகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 15 பேர் கொண்ட கும்பல், வட மாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, அங்கிருந்த சேர் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் கத்தி முனையில் அங்கிருந்தவர்களிடம் 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை பணத்தையும் பறித்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.