உலகம் முழுவதும் உள்ள மக்களின் உற்சாகத்திற்கிடையே, 2022 புத்தாண்டு பிறந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ந்தனர்.
2021ம் ஆண்டு முடிந்து 2022ம் ஆங்கிலப் புத்தாண்டு இனிதே பிறந்துள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
புதுச்சேரி கடற்கரையில் ஏராளமான வெளிநாட்டுப் பயணிகளும், வெளிமாநிலத்தவரும் திரண்டனர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு வாணவேடிக்கை நடைபெற்றது.
ஒருவருக்கொருவர் ஹேப்பி நியூஇயர் என வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருந்ததால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கோவா கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்து உற்சாக முழக்கமிட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு அவர்களின் கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.
மதுரையில் குடியிருப்புப் பகுதியிலும் புத்தாண்டு களைகட்டியது. கோச்சடை பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள 600 குடும்பத்தினர் இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை குதூகலமாகக் கொண்டாடினர்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள நகரங்கள் அமைதியாக புத்தாண்டை வரவேற்றன. மக்கள் ஆரவாரமின்றி ஒருவருக்கொருவர் சமூகவலைதளங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் புத்தாண்டை வரவேற்றனர்.
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதனைத்த தொடர்ந்து நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆங்கில புத்தாண்டு பிறந்த தை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் ஏராளமான மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மக்கள் விநாயகரை தரிசித்தனர்.
2022 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டியுள்ளன. மும்பையில் உள்ள பாந்த்ரா -வோர்லி கடல் பாலத்தின் மீது மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு கண்கவர் லேசர் காட்சிகளை மக்கள் கண்டு களித்தனர்.
மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான மின்விளக்குகளால் ஒளிவீசியது.
டெல்லியின் நாடாளுமன்ற வளாகத்தின் சவுத் பிளாக் ,நார்த் பிளாக் போன்ற இடங்களும் மின்விளக்குகளால் புத்தாண்டை வரவேற்று ஒளிவீசின.
புத்தாண்டை வரவேற்க நேற்று மாலை முதல் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. டெல்லியின் லோதி சாலையில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது.
இதே போல் இங்குள்ள அனுமன் கோவிலில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு ஆரத்தியில் பங்கேற்று அனைவருக்கும் புத்தாண்டு இனிதாக அமைய பிரார்த்தனை செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நள்ளிரவு புத்தாண்டு தொடங்கியதும் கொண்டாட்டம் களை கட்டியது. ஆயிரக்கணக்கான சீக்கியர் பக்தர்கள் திரண்டு ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர். ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் நள்ளிரவில் நீண்ட வரிசையில் காத்திருந்து இறைவனை வணங்கினர்