தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளது எனவும், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியானது இலங்கரை கடற்கரை வரை நிலவுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் டி.ஜி.பி. அலுவலகத்தில் 24 செண்டி மீட்டர் மழையும், ஆவடியில் 23 செண்டி மீட்டர் மழையும், எம்.ஆர்.சி. நகரில் 21 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
21 செண்டி மீட்டருக்கு மேல் மழை பதிவானலே அதிகனமழை என்று பொருள்படும் நிலையில், சென்னையில் சில இடங்களில் நேற்று அதி கனமழை பதிவாகியுள்ளது. அத்தோடு, பல இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.